ஒரு இளமலரின் இறுத்திப்பயணம்..
பதினாறில்சாவது கொடுமை, இப்படி ஒருவழக்கு தமிழில் உண்டு.
அந்தக்கொடுமை அமரர் சிவகௌரிக்கு நேர்ந்துவிட்து.
முதற்பிள்ளையை முத்தமிடும் கனவுடன் அவள் கருச்சுமந்த வேளையில்
அவளின் கனவுகளை மட்டுமல்ல அவளின் உயிரையும் காலன்
பறித்தெடுத்த கொடுமை நிகழ்ந்தேறிவிட்டது.
நோயால் அவள் பட்டவேதனையை உணர்ந்து நாம் துடித்தோம்.
அவளின் பிரிவால் நாம்படும் வேதனையை உணர அவள் இன்று உயிருடன் இல்லை.
இதயங்களால் தாங்க முடியாத வலிஅவளின் பிரிவு.
ஆனால் தாங்கித்தான் ஆகவேண்டும்.
அவளின் உயிர் பிரியும் அந்தக்கணத்தை அவளின் வயிற்றில் வளரும் சிசுவுக்காக
ஒத்திவைத்த மருத்துவர்கள் பெரும் போரையே நடத்தினார்கள்.
ஆனால் -
அப்போரில் 59ம் நாள் காலன் வென்றுவிட்டான்.
நெஞ்சங்களில் குருதிவழிய திரும்பி வர முடியாத தொலைவுக்குப் போய்விட்டாள்.
புற்று நோயால்; இறப்பவர் கோடிக்கு ஒருவர் என்ற நிலைபோய்
இலட்சத்துக்கு ஒருவராகி ஆயிரத்துக்கு ஒருவராக பெருகிவிட்டது.
புகைத்தல் புற்று நோய்க்கு காரணமாகலாம் என கண்ட இடமெல்லாம் விளம்பரங்கள்.
புகைப்பிடிப்பவர்கள் அருகில் கூட நின்றறியாள்.
மாமிச உணவைக்கூட நினைத்துப்பார்த்ததில்லை. மரக்கறி உணவை உண்டு வளர்ந்தவள்.
நாம் உண்ணும் அரிசியிலிருந்து மரக்கறி வரை நஞ்சூட்டப்படுகிறது.
இரசாயன பசளைகளும் கிருமி கொல்லிகளும் பயிர்களை நோய்வழங்கிகளாக மாற்றிவிட்டன.
எங்கள் உடல்களோ நோய்கள் குடியேறி கொலைக்கூத்தாடும் கூடாரங்கள் ஆகிவிட்டன.
யமக்கிரர்கள் பாசக்கயிறு கொண்டு உயிர்களை பறிக்கும் காலம் மலையேறிப் போக
பெரும் பசளை கிருமி உற்பத்தி நிறுவனங்கள் லாபக் கயிறு கொண்டு
எங்கள் உயிர்களை பறிக்கின்றன.
எங்கள் உயிர்கள் நோய்களுக்கு விருந்தாகி விடுகின்றன.
எல்லோரும் அறிந்த கொடுமைதான் இது.
மாற்று வழிமுறைகள் இருந்த போதும், மாற்று வழிகளை நாட உரியவர்களால் முடியவில்லை.
பெரும் தொழில் நிறுவனங்கள் முன் எல்லோரும் பகடைக்காய்கள் தான்.
இத்தகைய கொடுமையில்தான் மணம் வீசி மனம் நிறைய வேண்டிய
கௌரி இதழ் உதிர்ந்து சருகாகிவிட்டாள்.
அவள் நாளும் பொழுதும் நஞ்சுண்ட கண்டனை வழிபடும் பக்தை.
சிவனின் நஞ்சை பார்வதியார் தொண்டையுடன் தடுத்துவிட்டார்.
இவளில் மெல்லமெல்ல பரவிய நோயை அந்த நஞ்சுண்ட கண்டனே தடுக்கவில்லை.
தாங்க முடியாத துயரை எமக்குத்தந்துவிட்டு,
விலைமதிக்க முடியாத உயிரை கொண்டு போய்விட்டான்.
அவள் இறைவனை நம்பினாள். அவள் மீண்டு வருவாள் என நாம் நம்பினோம்.
இன்று அவள் நம்பிய இறைவனிடமே போய் சேந்துவிட்டாள்.
அவளின் குழந்தையின் வடிவில் அவளை கண்டு மனம் ஆறுவதைத்தவிர வேறு வழியில்லை
அவளின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.
திரு.நா.யோகேந்திரநாதன்.
(மூத்த ஊடகவியலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக