பக்கங்கள்

புதன், 13 ஜூலை, 2016

கேதார கௌரி விரத வரலாறு


திருக்கைலாயத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சிவன் பார்வதி தேவியுடன் கொலு வீற்றிருந்த போது தேவர்கள், முனிவர்கள், திக்குப் பாலகர்கள், கிரக வர்க்கத்தினர் முதலியோர் சென்று இருவரையும் வலம் வந்து வணங்கி நின்றனர். அப்போது அங்கு வந்த சிவ பக்தரான பிருங்கி முனிவர் சிவனுடைய அனுக்கிரக வசத்தினாலே பார்வதியை விட்டு சிவனை வலம் வந்து வணங்கி நின்றார். இதனை அவதானித்த தேவி சிவனை நோக்கி 'உங்களை மட்டும் இம்முனிவர் வணங்கியதன் காரணம் யாது?' என்று வினவ 'உமையே! உனக்கும் எனக்கும் உள்ள உறவை தேகத்துக்கும் உயிருக்கும் உள்ள உறவு போல் என்ற ஒரு கொள்கையுண்டு. இதன் பிரகாரம் தேகப் பற்றோடு வாழும் எவரும் என்னையும் உன்னையும் சேர்த்து வழிபடுவார்கள். உடல் பற்றை முற்றாக நீக்கியோர் உயிர் விசயத்திலேயே முற்றும் பற்றுள்ளோராகி தனிப்பட்ட என்னையே வணங்குவோர் ஆவார்கள். அத்தகையோரில் பிருங்கி முனிவரும் ஒருவரே. சிவ சிவ என்று ஈசன் நாமத்தை செபிப்பவர்கள். இறுதியில் சக்தி எழுத்தாகிய 'வா' வை விட்டு சி எழுத்தாகிய 'சி' யை மட்டும் செபிக்கும் விதியும் உண்டு. 'சி' மட்டுமே முத்திப் பஞ்சாட்சரம் என்ற கருத்தும் உண்டு. இதை நம் சைவ சித்தாந்தம் கூறும் இதைச் செவியுற்ற உமை அப்படியானால் பிருங்கி முனிவரின் சக்தியை முற்றாக நீக்கி விடுகின்றேன். அதன்பின் அவர் எப்படி இயங்குகின்றார் என்று பார்ப்போம்' என்று கூறியபடி பிருங்கியின் உடல் வலுவை முற்றாக விலக்கிவிட்டார். அப்போது பிருங்கி ஊன் உதிரப் பசையற்ற வெறும் எலும்புக் கூடாகி நடக்கமுடியாமல் தள்ளாடிய நிலையில் இருக்க சிவபெருமான் அவர் கையில் ஊன்றுகோல் ஒன்று கிடைக்க வகை செய்தார். இதனைப் பெற்ற பின்பும் முனிவர் மூன்று காலராகி மீண்டும் சிவனை மட்டும் சுற்றி வழிபட்டார்.
சிவபெருமானின் இச்செய்கையால் அவமானம் உற்ற பார்வதி தேவியார் அக்கணமே கைலையை விட்டு நீங்கி பூவுலகம் வந்து கௌதம முனிவரின் ஆச்சிரமத்தில உள்ள ஒரு வில்வமரத்தடியில் வீற்றிருந்தார். அப்போது பன்னிரண்டு வருடங்களாக மழையின்றி உலர்ந்து வாடி இருந்த விருட்சங்கள் எல்லாம் துளிர்த்து தழைத்து புஸ்பித்து காய்த்து படுத்ததையும் பூக்கள் எல்லாம் நறுமணம் வீசியதையும் கண்ணுற்ற கௌதம முனிவர் அதிசயித்து இத்திடீர் மாற்றத்துக்குரிய காரணத்தையும் இதன் மூல கர்த்தா யார்? என்பதையும் தம் ஞானக் கண்ணினால் கண்ட முனிவர் உடனே பார்வதி தேவியை அணுகி 'தாயே தாங்கள் என் ஆச்சிரமத்திற்கு வந்து இப்படித் தரையில் அமர்ந்திருக்கலாமா?' என்று கூறி தன் மந்திர சக்தியினால் சிம்மாசனம் அமைத்து அதில் அம்பாளை வீற்றிருக்கச் சென்று பூசித்து வணங்கி நின்று 'அம்மையே! தாங்கள் கைலையிலிருந்து தங்கள் பிரிய நாயகரைப் பிரிந்து இங்கு வந்ததன் காரணம் யாதோ? என்று விநாயகமாக வினாவ, அம்மையும் கைலாசத்தில் பிருங்கி முனிவரினால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் கூறி கௌதம மகரிஷியே! எதிர்காலத்தில் நம் நாயகரை மட்டும் வணங்கும் வழக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப் வேண்டும். இதனால் எம்மை எவரும் தனித்தனியே வணங்கும் நிலை ஏற்படாதல்லவா? ஏனக் கூறி இந்நிலையை யாம் அடைய ஓர் உபாயம் கூறும் என்று பார்வதி யம்மை கௌதம முனிவரைக் கேட்க அவர் அம்மையை வணங்கி, தாயே! தேவீரீர் திருவுளக் கருத்து சுலபமாக நிறைவேற ஒரு விரதம் இருக்கின்றது. அதற்கு கேதார கௌரி விரதம் என்பார்கள். இவ்விரதத்தை இதுவரை யாரும் அனுட்டித்ததில்லை. இதைத் தாங்கள் அனுட்டித்தால் தாங்கள் விரும்பும் வரத்தைப் பெறுவது மாத்திரம் அல்லாமல் இப்பூவுலகிலும் இவ்விரதம் நடைமுறைக்கு வந்து மானிடரும் தாங்கள் விரும்பும் வரங்களை வெகு விரைவில் பெற வழியண்டாகும் என்றார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த தேவி கேதார கௌரி விரதத்தை அனுட்டிக்கும் முறை யாது?' எனக் கேட்க முனிவரும் பின்வருமாறு விபரமாகக் கூறினார்.
இவ்விரதம் பெரும்பாலும் புரட்டாதி மாதச் சுக்கில பட்ச நவமி அல்லது அதற்கு முன் பின்னாக அட்டமி தசமி தினத்தில் ஆரம்பித்து ஐப்பசி மாதத்து கிருஷ்ண பட்சத் தீபாவளி அமாவசையிலும் முடிவுறும். இது இருபத்தொரு நாள் விரதமாகும். இவ்விரதத்தை அனுட்டிப்போர் ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்து சந்நியாவந்தனம் முடித்துக் கொண்டு ஆல மரத்தடியில் அல்லது பொருத்தமான வேறு விருட்சத்தினடியில் ஈரமண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து முறைப்படியே இலிங்கத்தில் கேதாரேஸ்வரரை ஆவாகணம் செய்து நீர் தெளித்து விபூதி, சந்தனம், புஸ்பம், மாலை, பட்டு என்பவற்றால் அலங்கரித்து பின் அர்க்கியம், தூபம், தீபம், நைவேத்தியம் முதலிய எல்லா உபசாரங்களுடனும் பூசை செய்தல் வேண்டும்.
பூசைக்கு நைவேத்தியமாக எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பபழம், தேங்காய், தாம்பூலம் என்பன இடம் பெற வேண்டும். நைவேத்தியம் சமர்ப்பித்தலில் இந்தப் பூசைக்கு ஒரு விசேட ஒழுங்குண்டு. ஆரம்ப தினமாகிய முதல் நாள் ஒரு எள்ளுருண்டை, ஒரு மஞ்சளுருண்டை, ஒரு அதிரசம், ஒரு வாழைப்பழம், ஒரு தேங்காய், ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு என்பன நைவேத்தியமாக இடம்பெற வேண்டும். அடுத்த இரண்டாம் நாள் அவை இரட்டிப்பாகக அதிகரிக்கும். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக அதிகரித்து இறுதி நாளாகிய இருபத்தோராவது நாள் நைவேத்திய திரவியங்கள் ஒவ்வொன்றும் இருபத்தொன்றாக அமையும். மேலும், இருபத்தொரு பட்டுநூல்களை ஒன்றாக முறுக்கி இலிங்கத்தில் முதல் நாளே சாத்தி வைக்க வேண்டும். இதைத் தோரணக் காப்பு என்பர். பூசை முடிவில் ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை வலம் வந்து நமஸ்கரித்து குறித்த தோரணக் கயிற்றில் ஒரு  முடிச்சு இடல் வேண்டும். இரண்டாம் நாள் இரு முறை வலம் வந்து ஒரு முடிச்சை இடல் வேண்டும். இப்படியாக நாட்கள் ஏற ஏற வலம் வருதல் அதிகரித்து கடைசி நாள் இருபத்தொரு முறை வலம் வந்து இருபத்தோராவது முடிச்சை இடல் வேண்டும். இப்படியாக இருபத்தொரு நாள் வழிபாடு நிறைவு பெற்ற பின் கேதார நாதரின் அருளைப் பெற்ற பின் கேதார நாதரின் அருளை வேண்டி தோரணக் காப்பை தம் இஷ்டப்படி முன்கையிலோ, புயத்திலோ, கழுத்திலோ தரித்துக் கொள்ளல் வேண்டும். இத்தோரணம் அடுத்த வருடம் விரதம் அனுட்டித்து இது போன்ற மறு தோரணக் காப்பு கட்டப்படும் போது மட்டுமே இக்கயிறு விலக்கப்பட்டு விலக்கிய கயிற்றையும் பூசித்த இலிங்கத்தையும் புண்ணிய தீர்த்தத்தில் விட்டு விட வேண்டும்.
இவ்விரதம் அனுட்டித்தவர் பூசைக்கு உபயோகித்த தீர்த்தத்தையும் நைவேத்தியம் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களையும் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு பார்வதி தேவியின் இவ்விரதத்தை அனுட்டித்தால் தீபாவளி அமாவசையில் அன்று பரமேஸ்வரர் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்து காட்சி கொடுத்து தேவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார் என்று கௌதம முனிவர் விரத விபரத்தைக் கூறினார்.
இதைக் கேட்டு திருவுளம் பூரித்த தேவி முனிவர் மூலமாக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முனிவரையே குருவாக வைத்து முறைப்படி விரதத்தை அனுட்டித்தும் தீபாவளி அமாவாசையன்று இறைவன் உமை முன் தோன்றி அவரை இமயமலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருப்பதியில் தமது திருவுருவில் இடது பாகத்தைத் தந்து அருளினார். இத்தெய்வீக நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்தலமே கேதாரநாதம் ஆகும். இங்கு கோவில் கொண்டுள்ள அர்த்த நாரீஸ்வரருக்கு கேதார கேதாரநாதர், கேதார கௌரி என்ற பெயர்கள் அன்று தொட்டு வழங்கலாயின. 

இறைவனும் இறைவியும் ஓர் உருவில் தாம் சரி பாதியாக இணைந்த பின்பும் பிருங்கி முனிவர் தன் வழிபாட்டு முறையை அதாவது சிவனை மட்டும் வலம் வந்து தரிசிப்பதைக் கைவிடவில்லை. சிவனும் பார்வதியும் இலிங்க உருவில் சரி பாதியாக இருப்பதை உணர்ந்து பிருங்கி முனிவர் தனது தபோபலத்தால் மிகவும் சக்தி வாய்ந்த வண்டின் உருவமெடுத்து இலிங்கத்தின் நடு மையத்தில் பின்புறமாகவிருந்து துவாரம் உண்டாக்கி இலிங்கத்தின் வலப்பாகத்தை மட்டும் வலம் வந்து வணங்கித் தம் கருத்தை நிறைவேற்றினார். தம் பெயரையும் அர்த்த பூர்வமான பெயராக்கிக் கொண்டார். (பிருங்கம் - வண்டு) அவர் பூசித்த இலிங்கம் அவரின் செயற்பாட்டிற்கு இலக்கான துளை உள்ள இலிங்கமாகத் திருநல்லூர் திருப்பதியில் மூலவறையில் இருப்பதை இன்றும் காணலாம். சுவாமி பொன் வண்ணமாக இருக்கின்றார். ஒரு நாளில் 05 வர்ணமாக தோன்றுகின்றார். இவ்விலிங்கத்தில் சில துவாரங்களுமுண்டு. இவ்விறைவனே திருநாவுக்கரசு நாயனாருக்கு திருவடி தீட்சை செய்தார். அமர்நீதி நாயனார் முத்தி பெற்ற தலமும் இதுவே. அப்பரும் சம்பந்தரும் இத்திருக்கோவில் மேல் தேவாரம் பாடியுள்ளனர். 
இவ்வண்ணம் பார்வதி தேவியால் அனுட்டிக்கப்பட்ட இவ்விரதம் நாளடைவில் பூவுலகிலும் பிரசித்தியாகியது. இக்காலத்தில் பக்தர்கள் இவ்விரதத்தை கோவில்களில் உள்ள சிவாசாரியார்கள் மூலம் தோரணக்கயிற்றில் இருபத்தொரு முடிச்சு இடுவித்து அதனைச் சிவலிங்கத்தில் சாத்தி இருபத்தோராவது நாள் அதைப் பெற்றுக் கட்டுவார்கள்.
இவ்விரதத்தை மனம், வாக்கு, காயம் அத்தனையும் திருக்கேதாரநாதர் வசமாகவிருந்து பக்தி சிரத்தையுடன் தொடர்ந்து அனுட்டித்து தாம் விரும்பிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு பெற்றவர் எண்ணிலர். இவ்விரதத்தை அனுட்டித்து வாழ்க்கையில் மேல் நிலை அடைந்ததும் விரதத்தை அகம்பாவத்தாலும்ஈ பணச் செருக்காலும் தொடராமல் விட்டவர் பெற்ற துன்பம் அளப்பரியது. இதை விளக்கும் ஓர் கதையும் உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக