
உச்சயினி என்ற நகரத்திலே வாழ்ந்த ஓர் ஏழை வைசிக அறிஞனின் இரு அழகிய புதல்விகளாகிய புண்ணியவதியும் பாக்கியவதியும் இவ்விரதத்தின் மேன்மையை சித்திராங்கதன் என்ற சிவபக்தன் மூலம் அறிந்து தங்கள் ஏழ்மை நீங்கவும் நல்ல கணவர்களைப் பெறவும் கருதி இவ்விரதத்தைத் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தனர். இதன் பயனாக எல்லாம் வல்ல இறைவன் கடாட்சத்தால் இருவரையும் இரு வேறு இராஜகுமாரர்கள் கண்டு காதலித்து விவாகம் செய்து கொண்டனர். புண்ணியவதியை உச்சயினி மன்னனின் மகனும் பாக்கியவதியை சோழ மன்னனின் மகனும் மணந்ததால் அவர்கள் பட்டத்து இராணிகளாக வாழ்ந்து வந்தனர். சில வருடங்களில் அரச போக வாழ்வால் மமதையும், அகங்காரமும், செல்வச் செருக்கும் பெற்ற பாக்கியவதி தான் பெற்ற அரசபோக வாழ்க்கை தன் அழகால் கிடைத்ததே ஒழிய விரத அனுட்டானத்தால் அல்ல என்ற எண்ணம் கொண்டவளாகி தான் தொடர்ந்து அனுட்டித்து வந்த கேதார கௌரி விரதத்தை விட்டாள். இதன் விளைவாக வேற்றரசன் சோழ அரசனின் இராச்சியத்தை கைப்பற்றி அவர்களை நாடு கடத்தியும் விட்டான். இதனால் பாக்கியவதியும் நாடு இழந்த மன்னனும் பிள்ளைகளும் ஒரு குடிசையில் ஏழ்மை நிலையில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினார்கள். இந்நிலையில் தன் கழுத்திலிருந்த பழைய விரத தோரணக் கயிற்றிலும் வெறுப்புற்று அதனையும் அறுத்து முற்றத்தில் இருந்த அவரைக் கொடிப் பந்தலில் வீசினாள். அவ்அவரைக் கொடி இயற்கைக்கு மாறாக நன்றாக பூத்துக் காய்த்தது. அந்த அவரைக் காய்களைச் சமைத்து தன் குடும்பத்தின் பட்டினியை ஓரளவு சமாளித்து வந்தாள். பாக்கியவதியின் வாழ்க்கைநிலை மிகமிக மோசமாக தன் சகோதரியாகிய புண்ணியவதியிடம் தன் மூத்த மகனை பொருள் உதவி பெற்று வரும்படி அனுப்பினாள். உச்சயினி சென்றதும் தம் ஏழ்மை நிலையைப் புண்ணியவதியிடம் கூறிப் பொன் முடிப்பு பெற்று திரும்பும் போது குளத்தில் நீர் குடிக்கும் பொருட்டு அதைக் குளக்கரையில் வைத்து விட்டு நீர் அருந்தும் போது மரத்தின் மேல் இருந்த கருடன் அப்பொன் முடிப்பைத் தூக்கிக் கொண்டு பறந்தது. வெறும் கையுடன் வீடு திரும்பி நடந்ததை கூறிய மகனை மீண்டும் சென்று புண்ணியவதியிடம் உதவி பெற்று வரும்படி பாக்கியவதி அனுப்பினாள். அங்கு சென்றதும் நடந்ததைக் கேட்ட புண்ணியவதி மீண்டும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்து மிக்க கவனமாக கொண்டு சென்று சகோதரியிடம் கொடுக்கும்படி கூறினாள். அவன் வரும் வழியில் ஒரு கள்வன் அவன் பொன் முடிப்பை தட்டிப் பறித்துக் கொண்டு ஓடினான். அப்பொழுது 'விரதத்தை விட்டவர்க்கு ஏது திரவியம்' என்று ஒரு அசரீரி வாக்கு கேட்டது. உடன் அவன் புண்ணியவதியிடம் திரும்பிச் சென்று நடந்தவற்றை விபரமாக மனவருத்தத்துடன் கூறத் தன் சகோதரி விரதத்தை இடையில் நிறுத்தியமையால் தான் இவ்விபரீதம் ஏற்பட்டது என்பதையறிந்து பாக்கியவதி மீண்டும் விரதத்தை அனுட்டிப்பதற்கு ஏற்ற வழிவகைகளை செய்து கொடுத்தாள். விரத அனுட்டானத்தைத் தொடர்ந்தும் அனுஷ்டிக்கத் தொடங்கியதும் முன்பு வழியில் திருடனாலும் கருடனாலும் பறிக்கப்பட்ட திரவியங்கள் திரும்பக் கிடைத்தன. பாக்கியவதியின் வாழ்விலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. சோழ அரசனும் பறிபோன தன் இராச்சியத்தை திரும்பப் பெற்றான்.
ஸ்கந்த புராணத்தில் உள்ள இக்கதையால் நாம் கேதார கௌரி விரதத்தின் மகிமையையும் அதைத் தொடர்ந்து செய்யாமல் உதாசீனம் செய்தமையால் ஏற்பட்ட விபரீதங்களையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்விரதத்தை தொடர்ந்து இருபத்தொரு வருடங்கள் ஆத்ம சுத்தியுடன் அனுட்டித்தால் விரும்பிய பலனைப் பெறலாம் என்பது திண்ணம். இது ஒரு பூசை சார்பான விரதம். இதை அனுசரிப்பது மிகவும் எளிது. சங்கற்பம், அபிஷேகம், நைவேத்தியம், தூபதீபம், அர்ச்சனை, வலம் வருதல் என்ற இவ்வளவுமே பூசையம்சமாகும். இது புனிதமான இல்லங்களிலும் மரத்தடிகளிலும் நிகழலாம். ஆதிகாலத்தில் அம்மியின் குழவியையோ ஆட்டுக்கல்லின் குழவியையோ பூசை செய்து இலிங்கமாகப் பாவித்து பூசித்து அனுட்டிக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறுவர். பூசையின் இறுதி நாளாகிய இருபத்தோராவது நாளில் அம்பாளையும் அலங்கரித்து இலிங்கத்துக்கு அருகில் வைத்துப் பூசிக்கும் வழக்கமும் உண்டு.
இவ்விரதம் இருபாலாருக்கும் உரியதே. விவாகமாகாத கன்னிப் பெண்களும், இளைஞர்களும், குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து இருப்போரும் இவ்விரதத்தை அனுட்டித்ததனால் அவர்களின் விருப்பங்கள் கூடிய விரைவில் நிறைவேறியதை நாம் எம் வாழ்நாட்களில் அறியக் கூடியதாக இருக்கின்றது.
'கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கால் மலர்தூவி
நம்பன்றமை யாள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்றினமாய் நின்று சுளை நீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந் திருக்கேதார மேனீரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக