இமயமலைச் சிகரத்தில் கைலாயம், பசுபதி நாதம், அமரநாதம், கேதார நாதம், பத்திரி நாதம் என்று பஞ்ச நாதங்கள் உண்டு. கைலாயம் தீபேத்தில் மலை உருவிலும் பசுபதி நாதர் நேபாளத்தில் பஞ்சமுகேஸ்வரராக வும் இந்தியாவின் வட எல்லையில் அமரநாதர் பனிக்கட்டியிலான இலிங்க அமைப்பிலும் கேதார நாதர் எருதுவின் ஏரி உருவில் அமைந்த சுயம்பு லிங்கமாகவும் பத்திரிநாதர் சாளக்கி ராமத்திலான நாராயணனாகவும் கோயில் கொண்டுள்ளனர்.
இத்திருத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. முன்செய்த நல்வினைப் பயனாலும், உடலில் வலியும், உள்ளத்தில் தென்பும், கருத்தில் நிறைய ஆர்வமும், திருவருள் துணையும் கிடைக்கப்பெற்றவர்களுக்கே இப்பேறு கிடைக்கும். மேலும், இவ்வருட் தலங்களில் பசுபதி நாதரைத் தவிர மற்றைய சேத்திரங்களை நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சென்று நேரில் தரிசிக்க முடியாது. ஆண்டில் ஆறு மாதகாலம் நல்ல உறைபனிக்குள்ளேயே மூர்த்தியும் கோவிலும் புதைந்து கிடக்கும். பனி உருகும் காலமாகிய வேனிற்காலம் தான் சென்று தரிசிக்க முடியும்.
மலைகளில் சிறந்தது இமயம். நதிகளில் சிறந்தது கங்கை. தெய்வத்தில் சிறந்தவர் சிவன். இவ்வுன்னத அதிமேன்மையுடைய மூர்த்தி, ஸ்தல, தீர்த்தச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது கேதார நாதம். இத்திருத்தலத்தைத் தரிசிப்பதற்கு வைகாசி தொடக்கம் ஐப்பசி மாதம் மட்டுமே உகந்த காலமாகும். ஆறு மாத காலம் மானிடரும் ஆறு மாத காலம் தேவரும் பூசிப்பர் என்பர். இக்கோயிலின் திருக்கதவை மார்கழி மாதம் கருவறையில் புஸ்பங்களையும், தீபத்தையும் ஏற்றி வைத்து அடைப்பர். பின் வைகாசி மாதம் திறக்கும் போது ஆறு மாதம் முன் ஏற்றி வைத்த தீபம் எரிந்து கொண்டும், பூக்கள் வாடாமலும் இருக்கும். இவ்வற்புதத்தைப் பார்ப்பதற்காக பல அடியார்கள் கதவு திறக்கும் முதல் நாளே செல்வதுண்டு. பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும் கோயில் கதவுகளை முதல் நாள் கோடரி கொண்டு பனிக்கட்டிகளை வெட்டியகற்றிய பின்பே திறப்பர்.
திருக்கேதார நாதரைத் தரிசிப்பதற்கு சென்னையில் இருந்து 2200 கி.மீ தூரத்தை விரைவு புகையிரதத்தில் தொடர்ந்து 36 மணித்தியாலயம் பிரயாணம் செய்து டெல்லியை அடைந்து அங்கிருந்து 200 கி.மீ தூரம் பஸ்ஸில் ஹரித்துவார் வரை சென்று அங்கிருந்து 235 கி.மீ தூரம் மலையில் ரிஷிகேசம் ஊடாக பஸ் மூலம் சென்று கௌரி குண்டத்தையடைந்து அங்கிருந்து கேதார நாதத்தை 14 கி.மீ தூரம் கால்நடையாகவோ, டோலி மூலமாகவோ, பல்லக்கிலோ, குதிரையில் ஏறியோ சென்றடையலாம்.
மலைப்பிரதேசப் பிரயாணத்தின் போது பனி மூடிய மலைச் சிகரங்களை மிக அருகில் காணலாம். புனி வெயிலில் உருகி ஓடுவது வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் இருக்கும். இக்காட்சிகளைக் காணும் போது பாரதியாரின் பாடலில் உள்ள 'வெள்ளிப்பனி மலை மீதில் உலாவுவோம்' என்ற அடிகள் தான் எம்மனதில் தோன்றும். வழி நெடுக மலையிலிருந்து சிறு சிறு அருவிகளாகத் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்நீர் ஆதாளபாதாளத்தில் விழுந்து பேரிரைச்சலுடன் பயங்கர வேகத்துடன் நதியாகப் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து மகிழலாம். இந்நதியில் ஓடும் பளிங்கு போன்ற பரிசுத்த நீரை அள்ளிக் குடிக்கவும், அதில் நீராடவும் மிகமிக ஆசையாக இருக்கும்.
உறைபனியிலிருந்து உருகி வருவதால் நீர் அதிக குளிராக இருக்கும். இவ் ஆற்று நீரே கங்கை நதியாக பல புண்ணிய ஸ்தலங்கள் ஊடாக பாய்ந்து பல மூலிகைகளைக் கழுவிக் கொண்டு வங்கக்கடலில் சங்கமமாகின்றது. இதனால் இக்கங்கை நதியில் நீராடியவர்களும் இப்புனித நீரைப் பருகியவர்களும் அவர்தம் அகம் புறம் சுத்தமாவதுடன் தீராத வினைகளும் நோய்களும் நீங்கும் என்பர். அது மாத்திரமல்ல. காசியில் உள்ள கங்கைக் கரையில் இறந்த ஆன்மாக்களின் காதுகளில் இறைவன் தாரக மந்திரத்தை ஓதி முத்தியடையச் செய்கின்றார். இதனாலன்றோ 'காசியில் இறக்க முத்தி' என்பர். இராமகிருஸ்ண பரமகம்சர் காசி விசுவநாதரைத் தரிசிக்க சென்ற போது கங்கைக் கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டடத்தில் இக்காட்சியை அவர் தம் ஞானக் கண்களால் கண்டதாக பரமகம்சர் சரித்திரம் கூறும். மேலும், பல வருடங்களுக்கு முன் திரிவேணி சங்கமத்தில் எடுத்துப் போத்தலில் அடைக்கப்பட்ட கங்கை நீர் இன்றும் பரிசுத்தமாக இருப்பது இதற்கு மேலும் சான்றுபகரும்.
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா தீர்த்த விழா 2001 ஆம் ஆண்டு தை மாதம் அலகபாத்திலுள்ள திருவேணி சங்கமத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் பல கோடிக்கணக்கான பக்தர்களும் உலகின் பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலையில் பிரயாணம் செய்யும் போது குளிர் மிக இருப்பதால் உடம்பை கம்பளி ஆடை, கால் உறை, கையுறை, ஸ்பெற்றர், குள்ளாய், மவ்ளர் போன்றவற்றால் மூடியிருந்தால் குளிரின் கடுமை அதிகம் தெரியாது. கௌரி குண்டத்திலிருந்து கேதாரநாதரை அடையும் வரை ஒற்றையடிப் பாதையால் நடந்தோ, குதிரையிலோ, டொலியிலோ, பல்லக்கிலோ தான் 14 கி.மீ தூரத்தைச் செல்ல வேண்டும். மலையில் சில இடங்களில் செங்குத்தாகவும் ஏற வேண்டும். ஊன்றுகோல் அச்சிரமத்தைக் குறைக்கும். அடிக்கடி அப்பிரதேசத்தில் மழை பெய்வதால் மழையங்கியுடனும் நடக்கும் போது பருக்கைக் கற்கள் பாதத்தை பதம் பார்க்கா வண்ணம் கண்வஸ் சப்பாத்துடனும் செல்லவேண்டியுள்ளது. போகும் பாதையில் உணவுக் கடைகள் அதிகம் இல்லை. யாத்திரீகர்கள் உலந்த திராச்சை, பேரீந்து, குளுக்கோஸ், பிஸ்கற், தேனீர் போன்றவற்றை எடுத்துச்செல்வது நன்று. பாதை வளைந்து வளைந்து தான் செல்லும். சில இடங்களில் ஒருவர் பின் ஒருவராகவும் மலைப் பாறைப்பக்கமாகவும் செல்ல வேண்டியுள்ளது. அடுத்த பக்கமாகச் சென்று தடுக்கி விழுந்தால் அதள பாதாளத்தைத் தான் அடைய நேரிடும். அப்படியாக ஒரு சம்பவமும் இதுவரை நடந்ததில்லை என அங்குள்ளோர் கூறினர். காரணம் யாத்திரிகர்களின் மனம், வாக்கு, காயம் யாவும் சிவன் வசமாக கேதார நாதகீஜய் என்ற கோசத்துடன் மலை ஏறுவதால் எதுவித விபத்தோ, பயமோ, துன்பமோ அணுவளவும் ஏற்படுவதில்லை. இறைவன் சந்நிதியை அணுக அணுக உடல் வேறு உயிர் வேறு என்ற நிலை மாறி இரண்டும் ஒன்றென்ற நிலையாகி உறைபனிக் குளிரினால் அங்கமெல்லாம் இல்லாதொழிந்த உணர்வடைந்து பந்தபாசம் சொத்து சுகம் எல்லாம் மறந்த நிலையடைந்து மனம் பரிபக்குவம் அடையும் நிலை பெறுவர்.
திருக்கோயிலுக்கருகில் மந்தாகினி நதி பாய்கின்றது. மூலவர் சுயம்பு லிங்க உருவ அமைப்பில் உள்ளார். 12 யோதிர் இலிங்கத்தில் இது பதினோராவது ஆகும். பிருங்கி முனிவரால் உமை கேதார கௌரி விரதம் அனுட்டித்து கேதாரநாதரின் இடதுபாகம் பெற்ற புண்ணியஸ்தலம் பஞ்ச பாண்டவர்கள் பாரதப் போரினால் ஏற்பட்ட வீரகத்தியும் பிரமகத்தியும் ஆகிய தோசங்கள் நீங்கப் பூசித்த புனித ஸ்தலமும் இதுவே. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கேதாரநாதர் மேல் தலா ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். இவ்விரு பதிகங்களும் திருக்கோயிலின் வெளிமதிலின் உட்பக்கத்தில் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் மேற்குப் பக்கத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மலை எக்காலத்திலும் உறைபனியால் மூடப்பட்டே இருக்கும். இதில் இருந்த பனி உருகியே மந்தாகினி நதியாகப் பாய்கின்றது. இப்பனி மலையில் ஏறி இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்களும் உண்டு என்பர். அங்குள்ளோர் இங்குள்ள பூசகர்களை நாவல்ஜி என்றே அழைப்பர். பூசை வட நாட்டுப்பாணியில் நடைபெறுகின்றது. இத்திருத்தலம் 11.750' உயரத்தில் உள்ளது.எமது சிவனொளிபாத மலையின் உயரம் கிட்டத்தட்ட 7000' என்பது குறிப்பிடத்தக்கது. மலை ஏறு முன்பும் இறங்கிய பின்பும் 11000' உயரத்தில் உள்ள கௌரி குண்டத்தில் சுடுநீர் ஊற்றில் நீராடுவர். இதனால் மலை ஏறி இறங்கிய களைப்போ உடல்வலியோ தெரிவதில்லை.