பக்கங்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்கேதாரத் தேவாரப் பதிகம்

பண் - செவ்வளி

2ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார் மலர்

இண்டை கட்டி வழிபாடு செய்யுமிடமென்பரால்

வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்

கெண்டை பாயச சுனைநீல பொட்டலருங் கேதாரமே.



பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேர்த்தவே

வேதநான்கும் பதினெட்டோடாறும் விரிந்தார்க்கிடம்

தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்

கீதம் பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.



முந்தி வந்து புரோதாய மூழ்கி முனிகள் பலர்

எந்தை பெம்மானென நின்றிறைஞ்சும் மிடமென்பரால்

மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்

கெந்த நாநக் கிளருஞ சடையெந்தை கேதாரமே.





உள்ளமிக்கார் குதிரை முகத்தார் ஒருகாலர்கள்

எள்களில்லா இமையோர்கள் சேருமிடமென்பரால்

பிள்ளை துள்ளிக் கிளைபயில்வ கேட்டுப் பிரியாது போய்க்

கிள்ளை யேனற் கதிர் கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.



ஊழியூழி யுணர்வோர்கள் வேதத்தினொன் பொருள்களால்

வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் மிடமென்பரால்

மேழிதாங்கி உருவார்கள் போலவ்விரை தேரிய

கேழல் பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.





நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன் மேல்

தேறுசிந்தையுடையார்கள் சேரும் மிடமென்பரால்

ஏறுமாவின் கனியும் பலாவின்னிருஞ் சுளைகளும்

கீறிநாளும் முசுக்கிளையொடுண்டுகளுங் கேதாரமே.



மடந்தை பாகத் தடக்கும் மறையோதி வானோர் தொழத்

தொடர்ந்த நம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்

உடைந்த காற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறை கண்மேல்

கிடந்த வேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.



அரவமும்நீ ரணியிலங்கைக் கோனையரு வரைதனால்

வெருவவூன்றி விரலால் அடர்த்தார்க் கிடமென்பரால்

குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்

கிரமமாக வரிவண்டு பண்செயுங் கேதாரமே.



ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்

தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்

வீழ்ந்து செற்று நிழற்கிறங்கும் வேழத்தின் வெண்மருப்பினைக்

கீழ்ந்து சிங்கங் குருகுண்ண முத்து திருக்கேதாரமே.



கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்

இடுக்கனுய்ப்பார் அவரெய்த வொண்ணா இடமென்பரால்

அடுக்க நின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்

கெடுக்க நின்று பெருமான் உறைகின்ற கேதாரமே.



வாய்ந்த செந்நெல் விளைகழனி மல்கும் வயற் காழியான்

ஏய்த்த நீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை

ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் மிரைவல்லவர்

வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவாரே.


புதன், 13 ஜூலை, 2016

புண்ணியவதி பாக்கியவதி கதை



உச்சயினி என்ற நகரத்திலே வாழ்ந்த ஓர் ஏழை வைசிக அறிஞனின் இரு அழகிய புதல்விகளாகிய புண்ணியவதியும் பாக்கியவதியும் இவ்விரதத்தின் மேன்மையை சித்திராங்கதன் என்ற சிவபக்தன் மூலம் அறிந்து தங்கள் ஏழ்மை நீங்கவும் நல்ல கணவர்களைப் பெறவும் கருதி இவ்விரதத்தைத் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தனர். இதன் பயனாக எல்லாம் வல்ல இறைவன் கடாட்சத்தால் இருவரையும் இரு வேறு இராஜகுமாரர்கள் கண்டு காதலித்து விவாகம் செய்து கொண்டனர். புண்ணியவதியை உச்சயினி மன்னனின் மகனும் பாக்கியவதியை சோழ மன்னனின் மகனும் மணந்ததால் அவர்கள் பட்டத்து இராணிகளாக வாழ்ந்து வந்தனர். சில வருடங்களில் அரச போக வாழ்வால் மமதையும், அகங்காரமும், செல்வச் செருக்கும் பெற்ற பாக்கியவதி தான் பெற்ற அரசபோக வாழ்க்கை தன் அழகால் கிடைத்ததே ஒழிய விரத அனுட்டானத்தால் அல்ல என்ற எண்ணம் கொண்டவளாகி தான் தொடர்ந்து அனுட்டித்து வந்த கேதார கௌரி விரதத்தை விட்டாள். இதன் விளைவாக வேற்றரசன் சோழ அரசனின் இராச்சியத்தை கைப்பற்றி அவர்களை நாடு கடத்தியும் விட்டான். இதனால் பாக்கியவதியும் நாடு இழந்த மன்னனும் பிள்ளைகளும் ஒரு குடிசையில் ஏழ்மை நிலையில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினார்கள். இந்நிலையில் தன் கழுத்திலிருந்த பழைய விரத தோரணக் கயிற்றிலும் வெறுப்புற்று அதனையும் அறுத்து முற்றத்தில் இருந்த அவரைக் கொடிப் பந்தலில் வீசினாள். அவ்அவரைக் கொடி இயற்கைக்கு மாறாக நன்றாக பூத்துக் காய்த்தது. அந்த அவரைக் காய்களைச் சமைத்து தன் குடும்பத்தின் பட்டினியை ஓரளவு சமாளித்து வந்தாள். பாக்கியவதியின் வாழ்க்கைநிலை மிகமிக மோசமாக தன் சகோதரியாகிய புண்ணியவதியிடம் தன் மூத்த மகனை பொருள் உதவி பெற்று வரும்படி அனுப்பினாள். உச்சயினி சென்றதும் தம் ஏழ்மை நிலையைப் புண்ணியவதியிடம் கூறிப் பொன் முடிப்பு பெற்று திரும்பும் போது குளத்தில் நீர் குடிக்கும் பொருட்டு அதைக் குளக்கரையில் வைத்து விட்டு நீர் அருந்தும் போது மரத்தின் மேல் இருந்த கருடன் அப்பொன் முடிப்பைத் தூக்கிக் கொண்டு பறந்தது. வெறும் கையுடன் வீடு திரும்பி நடந்ததை கூறிய மகனை மீண்டும் சென்று புண்ணியவதியிடம் உதவி பெற்று வரும்படி பாக்கியவதி அனுப்பினாள். அங்கு சென்றதும் நடந்ததைக் கேட்ட புண்ணியவதி மீண்டும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்து மிக்க கவனமாக கொண்டு சென்று சகோதரியிடம் கொடுக்கும்படி கூறினாள். அவன் வரும் வழியில் ஒரு கள்வன் அவன் பொன் முடிப்பை தட்டிப் பறித்துக் கொண்டு ஓடினான். அப்பொழுது 'விரதத்தை விட்டவர்க்கு ஏது திரவியம்' என்று ஒரு அசரீரி வாக்கு கேட்டது. உடன் அவன் புண்ணியவதியிடம் திரும்பிச் சென்று நடந்தவற்றை விபரமாக மனவருத்தத்துடன் கூறத் தன் சகோதரி விரதத்தை இடையில் நிறுத்தியமையால் தான் இவ்விபரீதம் ஏற்பட்டது என்பதையறிந்து பாக்கியவதி மீண்டும் விரதத்தை அனுட்டிப்பதற்கு ஏற்ற வழிவகைகளை செய்து கொடுத்தாள். விரத அனுட்டானத்தைத் தொடர்ந்தும் அனுஷ்டிக்கத் தொடங்கியதும் முன்பு வழியில் திருடனாலும் கருடனாலும் பறிக்கப்பட்ட திரவியங்கள் திரும்பக் கிடைத்தன. பாக்கியவதியின் வாழ்விலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. சோழ அரசனும் பறிபோன தன் இராச்சியத்தை திரும்பப் பெற்றான்.


ஸ்கந்த புராணத்தில் உள்ள இக்கதையால் நாம் கேதார கௌரி விரதத்தின் மகிமையையும் அதைத் தொடர்ந்து செய்யாமல் உதாசீனம் செய்தமையால் ஏற்பட்ட விபரீதங்களையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்விரதத்தை தொடர்ந்து இருபத்தொரு வருடங்கள் ஆத்ம சுத்தியுடன் அனுட்டித்தால் விரும்பிய பலனைப் பெறலாம் என்பது திண்ணம். இது ஒரு பூசை சார்பான விரதம். இதை அனுசரிப்பது மிகவும் எளிது. சங்கற்பம், அபிஷேகம், நைவேத்தியம், தூபதீபம், அர்ச்சனை, வலம் வருதல் என்ற இவ்வளவுமே பூசையம்சமாகும். இது புனிதமான இல்லங்களிலும் மரத்தடிகளிலும் நிகழலாம். ஆதிகாலத்தில் அம்மியின் குழவியையோ ஆட்டுக்கல்லின் குழவியையோ பூசை செய்து இலிங்கமாகப் பாவித்து பூசித்து அனுட்டிக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறுவர். பூசையின் இறுதி நாளாகிய இருபத்தோராவது நாளில் அம்பாளையும் அலங்கரித்து இலிங்கத்துக்கு அருகில் வைத்துப் பூசிக்கும் வழக்கமும் உண்டு.
இவ்விரதம் இருபாலாருக்கும் உரியதே. விவாகமாகாத கன்னிப் பெண்களும், இளைஞர்களும், குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து இருப்போரும் இவ்விரதத்தை அனுட்டித்ததனால் அவர்களின் விருப்பங்கள் கூடிய விரைவில் நிறைவேறியதை நாம் எம் வாழ்நாட்களில் அறியக் கூடியதாக இருக்கின்றது. 


'கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கால் மலர்தூவி
நம்பன்றமை யாள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்றினமாய் நின்று சுளை நீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந் திருக்கேதார மேனீரே

கேதார கௌரி விரத வரலாறு


திருக்கைலாயத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சிவன் பார்வதி தேவியுடன் கொலு வீற்றிருந்த போது தேவர்கள், முனிவர்கள், திக்குப் பாலகர்கள், கிரக வர்க்கத்தினர் முதலியோர் சென்று இருவரையும் வலம் வந்து வணங்கி நின்றனர். அப்போது அங்கு வந்த சிவ பக்தரான பிருங்கி முனிவர் சிவனுடைய அனுக்கிரக வசத்தினாலே பார்வதியை விட்டு சிவனை வலம் வந்து வணங்கி நின்றார். இதனை அவதானித்த தேவி சிவனை நோக்கி 'உங்களை மட்டும் இம்முனிவர் வணங்கியதன் காரணம் யாது?' என்று வினவ 'உமையே! உனக்கும் எனக்கும் உள்ள உறவை தேகத்துக்கும் உயிருக்கும் உள்ள உறவு போல் என்ற ஒரு கொள்கையுண்டு. இதன் பிரகாரம் தேகப் பற்றோடு வாழும் எவரும் என்னையும் உன்னையும் சேர்த்து வழிபடுவார்கள். உடல் பற்றை முற்றாக நீக்கியோர் உயிர் விசயத்திலேயே முற்றும் பற்றுள்ளோராகி தனிப்பட்ட என்னையே வணங்குவோர் ஆவார்கள். அத்தகையோரில் பிருங்கி முனிவரும் ஒருவரே. சிவ சிவ என்று ஈசன் நாமத்தை செபிப்பவர்கள். இறுதியில் சக்தி எழுத்தாகிய 'வா' வை விட்டு சி எழுத்தாகிய 'சி' யை மட்டும் செபிக்கும் விதியும் உண்டு. 'சி' மட்டுமே முத்திப் பஞ்சாட்சரம் என்ற கருத்தும் உண்டு. இதை நம் சைவ சித்தாந்தம் கூறும் இதைச் செவியுற்ற உமை அப்படியானால் பிருங்கி முனிவரின் சக்தியை முற்றாக நீக்கி விடுகின்றேன். அதன்பின் அவர் எப்படி இயங்குகின்றார் என்று பார்ப்போம்' என்று கூறியபடி பிருங்கியின் உடல் வலுவை முற்றாக விலக்கிவிட்டார். அப்போது பிருங்கி ஊன் உதிரப் பசையற்ற வெறும் எலும்புக் கூடாகி நடக்கமுடியாமல் தள்ளாடிய நிலையில் இருக்க சிவபெருமான் அவர் கையில் ஊன்றுகோல் ஒன்று கிடைக்க வகை செய்தார். இதனைப் பெற்ற பின்பும் முனிவர் மூன்று காலராகி மீண்டும் சிவனை மட்டும் சுற்றி வழிபட்டார்.
சிவபெருமானின் இச்செய்கையால் அவமானம் உற்ற பார்வதி தேவியார் அக்கணமே கைலையை விட்டு நீங்கி பூவுலகம் வந்து கௌதம முனிவரின் ஆச்சிரமத்தில உள்ள ஒரு வில்வமரத்தடியில் வீற்றிருந்தார். அப்போது பன்னிரண்டு வருடங்களாக மழையின்றி உலர்ந்து வாடி இருந்த விருட்சங்கள் எல்லாம் துளிர்த்து தழைத்து புஸ்பித்து காய்த்து படுத்ததையும் பூக்கள் எல்லாம் நறுமணம் வீசியதையும் கண்ணுற்ற கௌதம முனிவர் அதிசயித்து இத்திடீர் மாற்றத்துக்குரிய காரணத்தையும் இதன் மூல கர்த்தா யார்? என்பதையும் தம் ஞானக் கண்ணினால் கண்ட முனிவர் உடனே பார்வதி தேவியை அணுகி 'தாயே தாங்கள் என் ஆச்சிரமத்திற்கு வந்து இப்படித் தரையில் அமர்ந்திருக்கலாமா?' என்று கூறி தன் மந்திர சக்தியினால் சிம்மாசனம் அமைத்து அதில் அம்பாளை வீற்றிருக்கச் சென்று பூசித்து வணங்கி நின்று 'அம்மையே! தாங்கள் கைலையிலிருந்து தங்கள் பிரிய நாயகரைப் பிரிந்து இங்கு வந்ததன் காரணம் யாதோ? என்று விநாயகமாக வினாவ, அம்மையும் கைலாசத்தில் பிருங்கி முனிவரினால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் கூறி கௌதம மகரிஷியே! எதிர்காலத்தில் நம் நாயகரை மட்டும் வணங்கும் வழக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப் வேண்டும். இதனால் எம்மை எவரும் தனித்தனியே வணங்கும் நிலை ஏற்படாதல்லவா? ஏனக் கூறி இந்நிலையை யாம் அடைய ஓர் உபாயம் கூறும் என்று பார்வதி யம்மை கௌதம முனிவரைக் கேட்க அவர் அம்மையை வணங்கி, தாயே! தேவீரீர் திருவுளக் கருத்து சுலபமாக நிறைவேற ஒரு விரதம் இருக்கின்றது. அதற்கு கேதார கௌரி விரதம் என்பார்கள். இவ்விரதத்தை இதுவரை யாரும் அனுட்டித்ததில்லை. இதைத் தாங்கள் அனுட்டித்தால் தாங்கள் விரும்பும் வரத்தைப் பெறுவது மாத்திரம் அல்லாமல் இப்பூவுலகிலும் இவ்விரதம் நடைமுறைக்கு வந்து மானிடரும் தாங்கள் விரும்பும் வரங்களை வெகு விரைவில் பெற வழியண்டாகும் என்றார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த தேவி கேதார கௌரி விரதத்தை அனுட்டிக்கும் முறை யாது?' எனக் கேட்க முனிவரும் பின்வருமாறு விபரமாகக் கூறினார்.
இவ்விரதம் பெரும்பாலும் புரட்டாதி மாதச் சுக்கில பட்ச நவமி அல்லது அதற்கு முன் பின்னாக அட்டமி தசமி தினத்தில் ஆரம்பித்து ஐப்பசி மாதத்து கிருஷ்ண பட்சத் தீபாவளி அமாவசையிலும் முடிவுறும். இது இருபத்தொரு நாள் விரதமாகும். இவ்விரதத்தை அனுட்டிப்போர் ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்து சந்நியாவந்தனம் முடித்துக் கொண்டு ஆல மரத்தடியில் அல்லது பொருத்தமான வேறு விருட்சத்தினடியில் ஈரமண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து முறைப்படியே இலிங்கத்தில் கேதாரேஸ்வரரை ஆவாகணம் செய்து நீர் தெளித்து விபூதி, சந்தனம், புஸ்பம், மாலை, பட்டு என்பவற்றால் அலங்கரித்து பின் அர்க்கியம், தூபம், தீபம், நைவேத்தியம் முதலிய எல்லா உபசாரங்களுடனும் பூசை செய்தல் வேண்டும்.
பூசைக்கு நைவேத்தியமாக எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பபழம், தேங்காய், தாம்பூலம் என்பன இடம் பெற வேண்டும். நைவேத்தியம் சமர்ப்பித்தலில் இந்தப் பூசைக்கு ஒரு விசேட ஒழுங்குண்டு. ஆரம்ப தினமாகிய முதல் நாள் ஒரு எள்ளுருண்டை, ஒரு மஞ்சளுருண்டை, ஒரு அதிரசம், ஒரு வாழைப்பழம், ஒரு தேங்காய், ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு என்பன நைவேத்தியமாக இடம்பெற வேண்டும். அடுத்த இரண்டாம் நாள் அவை இரட்டிப்பாகக அதிகரிக்கும். இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக அதிகரித்து இறுதி நாளாகிய இருபத்தோராவது நாள் நைவேத்திய திரவியங்கள் ஒவ்வொன்றும் இருபத்தொன்றாக அமையும். மேலும், இருபத்தொரு பட்டுநூல்களை ஒன்றாக முறுக்கி இலிங்கத்தில் முதல் நாளே சாத்தி வைக்க வேண்டும். இதைத் தோரணக் காப்பு என்பர். பூசை முடிவில் ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை வலம் வந்து நமஸ்கரித்து குறித்த தோரணக் கயிற்றில் ஒரு  முடிச்சு இடல் வேண்டும். இரண்டாம் நாள் இரு முறை வலம் வந்து ஒரு முடிச்சை இடல் வேண்டும். இப்படியாக நாட்கள் ஏற ஏற வலம் வருதல் அதிகரித்து கடைசி நாள் இருபத்தொரு முறை வலம் வந்து இருபத்தோராவது முடிச்சை இடல் வேண்டும். இப்படியாக இருபத்தொரு நாள் வழிபாடு நிறைவு பெற்ற பின் கேதார நாதரின் அருளைப் பெற்ற பின் கேதார நாதரின் அருளை வேண்டி தோரணக் காப்பை தம் இஷ்டப்படி முன்கையிலோ, புயத்திலோ, கழுத்திலோ தரித்துக் கொள்ளல் வேண்டும். இத்தோரணம் அடுத்த வருடம் விரதம் அனுட்டித்து இது போன்ற மறு தோரணக் காப்பு கட்டப்படும் போது மட்டுமே இக்கயிறு விலக்கப்பட்டு விலக்கிய கயிற்றையும் பூசித்த இலிங்கத்தையும் புண்ணிய தீர்த்தத்தில் விட்டு விட வேண்டும்.
இவ்விரதம் அனுட்டித்தவர் பூசைக்கு உபயோகித்த தீர்த்தத்தையும் நைவேத்தியம் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களையும் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு பார்வதி தேவியின் இவ்விரதத்தை அனுட்டித்தால் தீபாவளி அமாவசையில் அன்று பரமேஸ்வரர் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்து காட்சி கொடுத்து தேவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார் என்று கௌதம முனிவர் விரத விபரத்தைக் கூறினார்.
இதைக் கேட்டு திருவுளம் பூரித்த தேவி முனிவர் மூலமாக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முனிவரையே குருவாக வைத்து முறைப்படி விரதத்தை அனுட்டித்தும் தீபாவளி அமாவாசையன்று இறைவன் உமை முன் தோன்றி அவரை இமயமலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருப்பதியில் தமது திருவுருவில் இடது பாகத்தைத் தந்து அருளினார். இத்தெய்வீக நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்தலமே கேதாரநாதம் ஆகும். இங்கு கோவில் கொண்டுள்ள அர்த்த நாரீஸ்வரருக்கு கேதார கேதாரநாதர், கேதார கௌரி என்ற பெயர்கள் அன்று தொட்டு வழங்கலாயின. 

இறைவனும் இறைவியும் ஓர் உருவில் தாம் சரி பாதியாக இணைந்த பின்பும் பிருங்கி முனிவர் தன் வழிபாட்டு முறையை அதாவது சிவனை மட்டும் வலம் வந்து தரிசிப்பதைக் கைவிடவில்லை. சிவனும் பார்வதியும் இலிங்க உருவில் சரி பாதியாக இருப்பதை உணர்ந்து பிருங்கி முனிவர் தனது தபோபலத்தால் மிகவும் சக்தி வாய்ந்த வண்டின் உருவமெடுத்து இலிங்கத்தின் நடு மையத்தில் பின்புறமாகவிருந்து துவாரம் உண்டாக்கி இலிங்கத்தின் வலப்பாகத்தை மட்டும் வலம் வந்து வணங்கித் தம் கருத்தை நிறைவேற்றினார். தம் பெயரையும் அர்த்த பூர்வமான பெயராக்கிக் கொண்டார். (பிருங்கம் - வண்டு) அவர் பூசித்த இலிங்கம் அவரின் செயற்பாட்டிற்கு இலக்கான துளை உள்ள இலிங்கமாகத் திருநல்லூர் திருப்பதியில் மூலவறையில் இருப்பதை இன்றும் காணலாம். சுவாமி பொன் வண்ணமாக இருக்கின்றார். ஒரு நாளில் 05 வர்ணமாக தோன்றுகின்றார். இவ்விலிங்கத்தில் சில துவாரங்களுமுண்டு. இவ்விறைவனே திருநாவுக்கரசு நாயனாருக்கு திருவடி தீட்சை செய்தார். அமர்நீதி நாயனார் முத்தி பெற்ற தலமும் இதுவே. அப்பரும் சம்பந்தரும் இத்திருக்கோவில் மேல் தேவாரம் பாடியுள்ளனர். 
இவ்வண்ணம் பார்வதி தேவியால் அனுட்டிக்கப்பட்ட இவ்விரதம் நாளடைவில் பூவுலகிலும் பிரசித்தியாகியது. இக்காலத்தில் பக்தர்கள் இவ்விரதத்தை கோவில்களில் உள்ள சிவாசாரியார்கள் மூலம் தோரணக்கயிற்றில் இருபத்தொரு முடிச்சு இடுவித்து அதனைச் சிவலிங்கத்தில் சாத்தி இருபத்தோராவது நாள் அதைப் பெற்றுக் கட்டுவார்கள்.
இவ்விரதத்தை மனம், வாக்கு, காயம் அத்தனையும் திருக்கேதாரநாதர் வசமாகவிருந்து பக்தி சிரத்தையுடன் தொடர்ந்து அனுட்டித்து தாம் விரும்பிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு பெற்றவர் எண்ணிலர். இவ்விரதத்தை அனுட்டித்து வாழ்க்கையில் மேல் நிலை அடைந்ததும் விரதத்தை அகம்பாவத்தாலும்ஈ பணச் செருக்காலும் தொடராமல் விட்டவர் பெற்ற துன்பம் அளப்பரியது. இதை விளக்கும் ஓர் கதையும் உண்டு. 

திருக்கேதார நாதம் யாத்திரை

இமயமலைச் சிகரத்தில் கைலாயம், பசுபதி நாதம், அமரநாதம், கேதார நாதம், பத்திரி நாதம் என்று பஞ்ச நாதங்கள் உண்டு. கைலாயம் தீபேத்தில் மலை உருவிலும் பசுபதி நாதர் நேபாளத்தில் பஞ்சமுகேஸ்வரராக வும் இந்தியாவின் வட எல்லையில் அமரநாதர் பனிக்கட்டியிலான இலிங்க அமைப்பிலும் கேதார நாதர் எருதுவின் ஏரி உருவில் அமைந்த சுயம்பு லிங்கமாகவும் பத்திரிநாதர் சாளக்கி ராமத்திலான நாராயணனாகவும் கோயில் கொண்டுள்ளனர்.
இத்திருத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. முன்செய்த நல்வினைப் பயனாலும், உடலில் வலியும், உள்ளத்தில் தென்பும், கருத்தில் நிறைய ஆர்வமும், திருவருள் துணையும் கிடைக்கப்பெற்றவர்களுக்கே இப்பேறு கிடைக்கும். மேலும், இவ்வருட் தலங்களில் பசுபதி நாதரைத் தவிர மற்றைய சேத்திரங்களை நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சென்று நேரில் தரிசிக்க முடியாது. ஆண்டில் ஆறு மாதகாலம் நல்ல உறைபனிக்குள்ளேயே மூர்த்தியும் கோவிலும் புதைந்து கிடக்கும். பனி உருகும் காலமாகிய வேனிற்காலம் தான் சென்று தரிசிக்க முடியும்.
மலைகளில் சிறந்தது இமயம். நதிகளில் சிறந்தது கங்கை. தெய்வத்தில் சிறந்தவர் சிவன். இவ்வுன்னத அதிமேன்மையுடைய மூர்த்தி, ஸ்தல, தீர்த்தச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது கேதார நாதம். இத்திருத்தலத்தைத் தரிசிப்பதற்கு வைகாசி தொடக்கம் ஐப்பசி மாதம் மட்டுமே உகந்த காலமாகும். ஆறு மாத காலம் மானிடரும் ஆறு மாத காலம் தேவரும் பூசிப்பர் என்பர். இக்கோயிலின் திருக்கதவை மார்கழி மாதம் கருவறையில் புஸ்பங்களையும், தீபத்தையும் ஏற்றி வைத்து அடைப்பர். பின் வைகாசி மாதம் திறக்கும் போது ஆறு மாதம் முன் ஏற்றி வைத்த தீபம் எரிந்து கொண்டும், பூக்கள் வாடாமலும் இருக்கும். இவ்வற்புதத்தைப் பார்ப்பதற்காக பல அடியார்கள் கதவு திறக்கும் முதல் நாளே செல்வதுண்டு. பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும் கோயில் கதவுகளை முதல் நாள் கோடரி கொண்டு பனிக்கட்டிகளை வெட்டியகற்றிய பின்பே திறப்பர்.
திருக்கேதார நாதரைத் தரிசிப்பதற்கு சென்னையில் இருந்து 2200 கி.மீ தூரத்தை விரைவு புகையிரதத்தில் தொடர்ந்து 36 மணித்தியாலயம் பிரயாணம் செய்து டெல்லியை அடைந்து அங்கிருந்து 200 கி.மீ தூரம் பஸ்ஸில் ஹரித்துவார் வரை சென்று அங்கிருந்து 235 கி.மீ தூரம் மலையில் ரிஷிகேசம் ஊடாக பஸ் மூலம் சென்று கௌரி குண்டத்தையடைந்து அங்கிருந்து கேதார நாதத்தை 14 கி.மீ தூரம் கால்நடையாகவோ, டோலி மூலமாகவோ, பல்லக்கிலோ, குதிரையில் ஏறியோ சென்றடையலாம்.
மலைப்பிரதேசப் பிரயாணத்தின் போது பனி மூடிய மலைச் சிகரங்களை மிக அருகில் காணலாம். புனி வெயிலில் உருகி ஓடுவது வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் இருக்கும். இக்காட்சிகளைக் காணும் போது பாரதியாரின் பாடலில் உள்ள 'வெள்ளிப்பனி மலை மீதில் உலாவுவோம்' என்ற அடிகள் தான் எம்மனதில் தோன்றும். வழி நெடுக மலையிலிருந்து சிறு சிறு அருவிகளாகத் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்நீர் ஆதாளபாதாளத்தில் விழுந்து பேரிரைச்சலுடன் பயங்கர வேகத்துடன் நதியாகப் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து மகிழலாம். இந்நதியில் ஓடும் பளிங்கு போன்ற பரிசுத்த நீரை அள்ளிக் குடிக்கவும், அதில் நீராடவும் மிகமிக ஆசையாக இருக்கும்.
உறைபனியிலிருந்து உருகி வருவதால் நீர் அதிக குளிராக இருக்கும். இவ் ஆற்று நீரே கங்கை நதியாக பல புண்ணிய ஸ்தலங்கள் ஊடாக பாய்ந்து பல மூலிகைகளைக் கழுவிக் கொண்டு வங்கக்கடலில் சங்கமமாகின்றது. இதனால் இக்கங்கை நதியில் நீராடியவர்களும் இப்புனித நீரைப் பருகியவர்களும் அவர்தம் அகம் புறம் சுத்தமாவதுடன் தீராத வினைகளும் நோய்களும் நீங்கும் என்பர். அது மாத்திரமல்ல. காசியில் உள்ள கங்கைக் கரையில் இறந்த ஆன்மாக்களின் காதுகளில் இறைவன் தாரக மந்திரத்தை ஓதி முத்தியடையச் செய்கின்றார். இதனாலன்றோ 'காசியில் இறக்க முத்தி' என்பர். இராமகிருஸ்ண பரமகம்சர் காசி விசுவநாதரைத் தரிசிக்க சென்ற போது கங்கைக் கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டடத்தில் இக்காட்சியை அவர் தம் ஞானக் கண்களால் கண்டதாக பரமகம்சர் சரித்திரம் கூறும். மேலும், பல வருடங்களுக்கு முன் திரிவேணி சங்கமத்தில் எடுத்துப் போத்தலில் அடைக்கப்பட்ட கங்கை நீர் இன்றும் பரிசுத்தமாக இருப்பது இதற்கு மேலும் சான்றுபகரும்.
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா தீர்த்த விழா 2001 ஆம் ஆண்டு தை மாதம் அலகபாத்திலுள்ள திருவேணி சங்கமத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் பல கோடிக்கணக்கான பக்தர்களும் உலகின் பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலையில் பிரயாணம் செய்யும் போது குளிர் மிக இருப்பதால் உடம்பை கம்பளி ஆடை, கால் உறை, கையுறை, ஸ்பெற்றர், குள்ளாய், மவ்ளர் போன்றவற்றால் மூடியிருந்தால் குளிரின் கடுமை அதிகம் தெரியாது. கௌரி குண்டத்திலிருந்து கேதாரநாதரை அடையும் வரை ஒற்றையடிப் பாதையால் நடந்தோ, குதிரையிலோ, டொலியிலோ, பல்லக்கிலோ தான் 14 கி.மீ தூரத்தைச் செல்ல வேண்டும். மலையில் சில இடங்களில் செங்குத்தாகவும் ஏற வேண்டும். ஊன்றுகோல் அச்சிரமத்தைக் குறைக்கும். அடிக்கடி அப்பிரதேசத்தில் மழை பெய்வதால் மழையங்கியுடனும் நடக்கும் போது பருக்கைக் கற்கள் பாதத்தை பதம் பார்க்கா வண்ணம் கண்வஸ் சப்பாத்துடனும் செல்லவேண்டியுள்ளது. போகும் பாதையில் உணவுக் கடைகள் அதிகம் இல்லை. யாத்திரீகர்கள் உலந்த திராச்சை, பேரீந்து, குளுக்கோஸ், பிஸ்கற், தேனீர் போன்றவற்றை எடுத்துச்செல்வது நன்று. பாதை வளைந்து வளைந்து தான் செல்லும். சில இடங்களில் ஒருவர் பின் ஒருவராகவும் மலைப் பாறைப்பக்கமாகவும் செல்ல வேண்டியுள்ளது. அடுத்த பக்கமாகச் சென்று தடுக்கி விழுந்தால் அதள பாதாளத்தைத் தான் அடைய நேரிடும். அப்படியாக ஒரு சம்பவமும் இதுவரை நடந்ததில்லை என அங்குள்ளோர் கூறினர். காரணம் யாத்திரிகர்களின் மனம், வாக்கு, காயம் யாவும் சிவன் வசமாக கேதார நாதகீஜய் என்ற கோசத்துடன் மலை ஏறுவதால் எதுவித விபத்தோ, பயமோ, துன்பமோ அணுவளவும் ஏற்படுவதில்லை. இறைவன் சந்நிதியை அணுக அணுக உடல் வேறு உயிர் வேறு என்ற நிலை மாறி இரண்டும் ஒன்றென்ற நிலையாகி உறைபனிக் குளிரினால் அங்கமெல்லாம் இல்லாதொழிந்த உணர்வடைந்து பந்தபாசம் சொத்து சுகம் எல்லாம் மறந்த நிலையடைந்து மனம் பரிபக்குவம் அடையும் நிலை பெறுவர்.
திருக்கோயிலுக்கருகில் மந்தாகினி நதி பாய்கின்றது. மூலவர் சுயம்பு லிங்க உருவ அமைப்பில் உள்ளார். 12 யோதிர் இலிங்கத்தில் இது பதினோராவது ஆகும். பிருங்கி முனிவரால் உமை கேதார கௌரி விரதம் அனுட்டித்து கேதாரநாதரின் இடதுபாகம் பெற்ற புண்ணியஸ்தலம் பஞ்ச பாண்டவர்கள் பாரதப் போரினால் ஏற்பட்ட வீரகத்தியும் பிரமகத்தியும் ஆகிய தோசங்கள் நீங்கப் பூசித்த புனித ஸ்தலமும் இதுவே. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கேதாரநாதர் மேல் தலா ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். இவ்விரு பதிகங்களும் திருக்கோயிலின் வெளிமதிலின் உட்பக்கத்தில் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் மேற்குப் பக்கத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மலை எக்காலத்திலும் உறைபனியால் மூடப்பட்டே இருக்கும். இதில் இருந்த பனி உருகியே மந்தாகினி நதியாகப் பாய்கின்றது. இப்பனி மலையில் ஏறி இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்களும் உண்டு என்பர். அங்குள்ளோர் இங்குள்ள பூசகர்களை நாவல்ஜி என்றே அழைப்பர். பூசை வட நாட்டுப்பாணியில் நடைபெறுகின்றது. இத்திருத்தலம் 11.750' உயரத்தில் உள்ளது.எமது சிவனொளிபாத மலையின் உயரம் கிட்டத்தட்ட 7000' என்பது குறிப்பிடத்தக்கது. மலை ஏறு முன்பும் இறங்கிய பின்பும் 11000' உயரத்தில் உள்ள கௌரி குண்டத்தில் சுடுநீர் ஊற்றில் நீராடுவர். இதனால் மலை ஏறி இறங்கிய களைப்போ உடல்வலியோ தெரிவதில்லை.

கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள்

எடுத்து வைத்துலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கை, சேலை, சால்வை, எருக்கிலை,ஆமணக்கிலை என்பவற்றில் கொண்டு வந்த பூவும், காற்றில் அடிபட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவும் கடவுட் பூசைக்கு ஆகாதவை.


சனி, 5 மார்ச், 2016

கௌரிப்பா மாலை

கௌரிப்பா மாலை
பிள்ளையார் காப்பு

முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைந்ததற்கு

என்னின்று அருள் ஆலடி விநாயகனே

சொற்குற்ற மொடு பொருட் குற்றம் சோர்வு தரும்

எக்குற்றமும் வராமற் கா.


                                                                  கௌரி காப்பு




 காரனைய கூந்தல் கவுரியியற்றிய
கேதார விரதத்தை யான் படிக்க சீரிலகும்
ஐந்து கரத் தந்தி முகத்தண்ணலடி யார்க்கருளுங்
கந்தமலர் செஞ்சரனே காப்பு. 



காப்பெடுக்க வந்தேனே கௌரி அம்பாள் தாயே

காத்து என்னை தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின் அரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாய் முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோல போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிருக்கு உயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளி மகா தேவியரே காப்பெனக்கு தந்திடுவாய்

சூலம் கைக் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளித்தாயே

கொடிய மகிடாசூரனைக் கூறு போட்டவளே

அசுரர் குணம் யாவும் அளிக்கும் சுடர்க் கொடியே

சிவனை நினைத்தெல்லோ சீர்விரதம் நீ இருந்தாய்

பரனை நினைத்தெல்லோ பதி விரதம் நீ இருந்தாய்

அரனை நினைத்தெல்லோ அம்மா நீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய்

விரதத்தை கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உனை அழைத்தே அருள் மாரி பொழிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாய் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிவிடு

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நற்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கு அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்கு பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நாம் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்கு கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே

ஏட்டுடைத் தேவியரே எல்லாம் மிகு வல்லமையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால் பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுனக்குத் தாறேனம்மா நயந்தென்னை காருமம்மா

காளி மகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினை காக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உனதருளே

காசினியில் வேற்றுமையைக் கணப்பொழுதில் மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏற்றுபுகழ் தாயாரே

காப்பெனக்கு போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் மிகுந்து வரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோருக்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோருக்கு நல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்து வரும்

சந்தணச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக் கொழுந்தே கௌரியம்மா

காப்பினைக் கட்டிவிட்டு கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிக விட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்பு கட்டதனில்

பூவும் நீருமிட்டு போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்கு கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலை போல் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண் திறந்து காட்டுமடி

சொல்லற்கரிதான சோதிமிகு காப்பதனை 

இருபது நாள்வரையும் இசைவோடு விரதமிருந்து 

பக்தி மனதுடனே பரவி அணிவோர்க்கு 

சித்தியெல்லாம் தருவாள சீர்பெரு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்திலோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரி காப்பதனை காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர 

ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பருளும்.


திருக்கேதார நாதமும் கேதார விரதமும் திருக்கேதார மகிமை

திருக்கேதார நாதமும் கேதார விரதமும்

திருக்கேதார மகிமை


அறம்பொருள்கள் இன்பம் வீ(டு) அருள்நந்தி ஆரூரர்

ஆதியோர் மேவு கயிலை

யங்கிரிக்குத் தெற்கு இலக்கமே இருப்பதுடன்

ஐயாயிரம் படியெனும்

நிறைந்த மலை உண்(டு) அவையுள் முதல் மலை இ(து) ஆதலால்

நின்னைக் காவனில் வைத்து

நீள்மந்திர சிங்காசனத்(து) அம்புடன் மேவும்

நிருமலன் வெள்ளி வெற்பில்

பிறந்திறந் துழலாமல் ஆனந்த அமுதுண்டு

பெருவாழ்வு பெற்றிருக்கப்

பேராசை யுற்றோர் சரீரத்துடன் வரப்
பெரியவருள் முத்தி வாய்தல்

திறந்திருக் குஞ்சிவன் கேதாரம் வாழ் முருக

சிறுதேர் உருட்டியருளே

தேகம் விட்(டு) சந்நிதிக்கடிய னேன்வரச்

சிறு தேர் உருட்டியருளே.


விக்னேஸ்வரர் அர்ச்சனை

விக்னேஸ்வரர் அர்ச்சனை

தியானம்

மூஷிக வாகன மோதக ஹஸ்தா

சாமர கர்ண விலம்பித சூத்ர

வாமன ரூப மஹேந்திர புத்ரா

விக்ன விநாயக பாத நமஸ்தே

ஓம் சுமுகாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் கபிலாய நம

ஓம் கஜகர்ணகாய நம

ஓம் லம்போதராய நம

ஓம் விகடாய நம

ஓம் விக்னராஜாய நம

ஓம் விநாயக நம

ஓம் தூமகேதவே நம

ஓம் கணாத்யஷயா நம

ஓம் பாலச்சந்திராய நம

ஓம் கஜானனாய நம

ஓம் வக்ரதுண்டாய நம

ஓம் சூர்ப கர்னாய நம

ஓம் ஹேரம்பாய நம

ஓம் ஸ்கந்தபூர்சஜாய நம


gowry amma









சனி, 23 ஜனவரி, 2016

amma



சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவகௌரி:


சித்திரா பௌர்ணமியாம் 

என்னையும் விரதமிருக்கட்டாம்.

என்தாயை காணவில்லைத்தான் 

ஆனால் -- அவள் சாகவில்லையே. 

தாய் இறந்தால்த் தான் 

சித்திரா பௌர்ணமி விரதமிருக்;க வேண்டுமென்று 

அம்மா சொல்வாள். 

'ஆத்தை பறுவம் அப்பு....' என்று 

ஏதோ பழமொழியும் சொல்வதுண்டு. 

என் தாயிருக்கும் போது ஏன் விரதம்.

நானறிய அம்மா சாகவில்லை.

ஏனெனில் ----

தாய்க்காக நான் கொள்ளிக்குடம் சுமக்கவில்லை.

கொள்ளி சொருகவில்லை. வாய்க்கரிசி போடவில்லை.

ஏன் நோயில் படுத்திருக்க சொட்டுப்பால் கூட வார்க்கவில்லை.

எப்படி அவளைச் செத்தாள் என சொல்லமுடியும்.

நானும் அம்மாவைத் தொலைத்தவன் தான்

கடைசியாய் நான் கண்டபோது மெலிந்து கறுத்திருந்தார்.

கண்கள் குழிவிழுந்து முதுமை காலமுதிர்வின் 

முன்பே அவளை வலுக்கட்டாயமாக தழுவியிருந்தது.

தலை முடி நரைத்தது மட்டுமில்லாமல்

கணிசமான அளவு உதிர்ந்துமிருந்தது.

நடையிலும் தளர்விருந்தாலும் நிதானமிருந்தது.

செல்லடிக்குள்ளும் காதைக்கூர்மையாக்கி 

'கூவுது' படுங்கோ! என எச்சரித்துக் காக்கும் 

வல்லமையோடிருந்தாள். 

கடைசியாய் நான் பிரிந்தபோது 'கவனமடா'

என்றுதான் கூறியனுப்பினாள்.

நிச்சயமாக தான் கவனமுடனிருந்திருப்பாள்.

ஆனால் -- இன்னமும் காணவில்லை.

பதினாறாம் திகதி உயிர்காத்து

ஓடிவந்துவிட்ட பின்பு தான் என்னால் தேட முடிந்தது.

இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

சிலர் சொல்கிறார்கள் எனது அம்மாவும் 

இறந்துவிட்டாளாம் அவர்கள் கண்டார்களாம். 

இன்னும் சிலர் சொல்கிறார்கள் 

என்னைத்தேடி அலைந்தாளாம்.

எதையும் என்னால் ஏற்கமுடியவில்லை. 

என்தாயை காணவில்லைத்தான் ஆனால் --

அவள் சாகவுமில்லை. 

எதற்காக நான் 'பறுவ' விரதமிருப்பான்.

யான் 'தாயைத்தின்னி'யல்ல..... 

தாயைத்தொலைத்தவன் தான்.