ஞாயிறு, 24 ஜனவரி, 2016
சனி, 23 ஜனவரி, 2016
சிவசுப்பிரமணியக்குருக்கள் சிவகௌரி:
சித்திரா பௌர்ணமியாம்
என்னையும் விரதமிருக்கட்டாம்.
என்தாயை காணவில்லைத்தான்
ஆனால் -- அவள் சாகவில்லையே.
தாய் இறந்தால்த் தான்
சித்திரா பௌர்ணமி விரதமிருக்;க வேண்டுமென்று
அம்மா சொல்வாள்.
'ஆத்தை பறுவம் அப்பு....' என்று
ஏதோ பழமொழியும் சொல்வதுண்டு.
என் தாயிருக்கும் போது ஏன் விரதம்.
நானறிய அம்மா சாகவில்லை.
ஏனெனில் ----
தாய்க்காக நான் கொள்ளிக்குடம் சுமக்கவில்லை.
கொள்ளி சொருகவில்லை. வாய்க்கரிசி போடவில்லை.
ஏன் நோயில் படுத்திருக்க சொட்டுப்பால் கூட வார்க்கவில்லை.
எப்படி அவளைச் செத்தாள் என சொல்லமுடியும்.
நானும் அம்மாவைத் தொலைத்தவன் தான்
கடைசியாய் நான் கண்டபோது மெலிந்து கறுத்திருந்தார்.
கண்கள் குழிவிழுந்து முதுமை காலமுதிர்வின்
முன்பே அவளை வலுக்கட்டாயமாக தழுவியிருந்தது.
தலை முடி நரைத்தது மட்டுமில்லாமல்
கணிசமான அளவு உதிர்ந்துமிருந்தது.
நடையிலும் தளர்விருந்தாலும் நிதானமிருந்தது.
செல்லடிக்குள்ளும் காதைக்கூர்மையாக்கி
'கூவுது' படுங்கோ! என எச்சரித்துக் காக்கும்
வல்லமையோடிருந்தாள்.
கடைசியாய் நான் பிரிந்தபோது 'கவனமடா'
என்றுதான் கூறியனுப்பினாள்.
நிச்சயமாக தான் கவனமுடனிருந்திருப்பாள்.
ஆனால் -- இன்னமும் காணவில்லை.
பதினாறாம் திகதி உயிர்காத்து
ஓடிவந்துவிட்ட பின்பு தான் என்னால் தேட முடிந்தது.
இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
சிலர் சொல்கிறார்கள் எனது அம்மாவும்
இறந்துவிட்டாளாம் அவர்கள் கண்டார்களாம்.
இன்னும் சிலர் சொல்கிறார்கள்
என்னைத்தேடி அலைந்தாளாம்.
எதையும் என்னால் ஏற்கமுடியவில்லை.
என்தாயை காணவில்லைத்தான் ஆனால் --
அவள் சாகவுமில்லை.
எதற்காக நான் 'பறுவ' விரதமிருப்பான்.
யான் 'தாயைத்தின்னி'யல்ல.....
தாயைத்தொலைத்தவன் தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)